13.2.08

இலங்கையில் அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் இந்தியா கவலை கொள்ள மறுக்கிறது - புலவர் புலமைபித்தன்

TAMIL VIDEO
- Puler Pulamaipiththan's questioning Indian position on Sri Lankan Tamils (VIDEO) [You Tube]
PART - I ; PART - II ; PART - III : PART - IV : PART - V : PART - VI :
---------------------------
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது:

"புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம்.

"அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி?

"மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) "ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து "நூறு கோடி தேவைப்படும்" என்றார். "சரி பார்க்கலாம்" என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.

அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989 ஆம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜொனியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி "நான் லண்டன் போய் வரட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம். ஜொனி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்' என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து "ஒரு கொலையை" மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?"

தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

"அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், "ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31 ஆம் திகதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5:00 மணியளவில் இராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. "அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய இராணுவத்தால் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாத குறையாக முறையிட்டார்.

அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.
அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

"நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை? இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, "உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?" என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. "நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு" என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?"

ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே?

"உண்மைதான் அது. இந்திய இராணுவம் புதைமணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?" என்றார்.

நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். "அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்" என்று வருத்தப்பட்டார்.

"சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?" என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். "இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து "தமிழீழத் தாயகம்" என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
இரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2:30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் இரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால் ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது."

புலிகளைக் காரணம் காட்டி காங்கிரசார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே?

"பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியொரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்த பூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்."

3.2.08

மவுண்ட் ரோடு மகாவிசுணு, இந்தியா, தமிழீழம்

மக்களை தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரால் 'மவுண்ட் ரோடு மகாவிசுணு" என்று அடையாளம் காட்டப்பட்ட 'இந்து" நாளிதல், ஈழப்பிரச்சனை குறித்து மீண்டும் திருவாய் மலர்ந்திருக்கிறது. எழுதப்பட்டுள்ள தலையங்கம் 'பிரபாகரன் தலைமையேற்கும் வரை தமிழர் பிரச்சனை தீராது" என்று விதன்டாவாதம் செய்கிறது. 'பிரபாகரன் இருக்கும் வரை" என்று சொல்ல விரும்புவதைத்தான் 'பிரபாகரன் தலைமையேற்கும் வரை" என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறது 'இந்து".

சுனாமி அலையில் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டு தனது மன வக்கிரத்தை அப்பட்டமாக வெளியிட்டது இதே 'இந்து" தான். எவ்வளவு பெரிய அபாண்டத்தை அச்சில் ஏற்றினாலும் அதற்காக மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது மகாவிசுணுவின் பத்திரிக்கை தர்மம்.

'போல் பாட் பாணி தலைவர்" என்று பிரபாகரனைக் குறிப்பிடும் 'இந்து" 'புலிகள் பலவினப்பட்டு விட்டார்கள்" என்ற தனது வழக்கமான கோயபல்சு பாணி பிரச்சாரத்தை மீண்டும் தூசுதட்டி எடுத்து வருகிறது. கம்போடியாவில் 1975 முதல் 1979 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில் சுமார் 20 லட்சம் அப்பாவிகளைக் கொன்று குவித்த போல் பாட்டுக்கும் 1958-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களிலும் 1983 சுலை மாதம் இலங்கைத் தீவு முழுக்க ஓரே சமயத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனக்கலவரங்களிலும் ஆயிரக்கனக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கபட்டதையடுத்து இனவெறியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்? மகாவிசுணுவுக்கே வெளிச்சம்.

'புலிகள் பலவினப்பட்டு விட்டார்கள்" என்ற வாக்கியத்தை சென்ற பத்தாண்டாவது ஆயிரத்தோரு முறையாக எழுதுகிறது இந்து. இலங்கையில் எந்த கட்சிக்கும் - எந்த அமைப்புக்கும் இல்லாத பல்பரிமான பலம் புலிகளுக்கு மட்டுமே இருக்கிறது. விரிவான நிர்வாகப்பரப்பு வலுவான அரசியல் அமைப்பு முப்படைகளைக் கொண்ட வசதியான ராணுவக் கட்டமைப்பு என்று எல்லா தளங்களிலும் வேடூன்றியிருக்கும் போராளிகள் அமைப்பு என்ற பெருமை உலக அளவில் புலிகளுக்கு மட்டுமே உள்ளது.

ஓரே ஒரு உள்ர்த் துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அரசின் முட்டாள்தானமான எதிர்ப்பாலும் இந்து போன்ற அரச எடுபிடிகளின் பொய்ப் பிரச்சாரத்தாலும் இந்த அளவுக்குப் படர்ந்திருக்கிறது. இந்த வலுவான வளர்ச்சிக்கு முதல் காரணம் அந்த அமைப்பின் அனைத்துப் பிரிவினரிடையேயும் காணப்படும் அர்ப்பணிப்பு உணர்வு. இரண்டாவது பிரபாகரன் மீது ஈழமக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. 2004 பொதுத்தேர்தலில் புலிகள் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு பெற்ற பெரும் வெற்றி புலிகளுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படுத்த முயலும் இந்து போன்றவற்றின் அதர்மப் பார்வைக்கு விடுக்கப்பட்ட சவால்.

கோயபல்சுகளின் அடுத்த புலம்பல் - பிரபாகரன் உரையில் ராசிவ் கொலை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பது. அனுதினமும் ராசிவை நினைத்துக் கொண்டிருக்க ராசிவ் என்ன மகாத்மா காந்தியா? தாயின் திடீர் மரணம் அந்தப் பைலட்டை ஆரசியலுக்கு இழுத்தது. அவர் பதிவயேற்றபோது தலைநகர் டெல்லி எரிந்து கொண்டிருந்தது. அவர் கண்டு கொள்ளவில்லை. தந்தை பெயரைத் தன்பெயருடன் சேர்த்து ராசிவ் பெரோசு என்று குறிப்பிட்ட அவர் விரும்பவில்லை. காந்தியின் பெயரை அவரும் பிடித்துக் கொண்டார்.

ராசிவின் அரசியலும் சிறுபிள்ளைத்தானமாய் இருந்தது. இந்தியா கிராமாங்களில் தான் வாழ்கிறது என்ற காந்தியின் பார்வையைத் தகர்த்து 'கம்ப்யூட்டரில்தான் வாழ்கிறது" என்று திருத்தி எழுதிய திருமானார் அவர்தான். அவரது அறியாமையால்தான் இன்று வரை இந்தியாவின் தொழில் விவசாயிகள் தற்கொலையின் மூலக்காரணம்.

அறியாமைக்கு மட்டுமல்லாமல் நேர்மையின்மைக்கும் அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பேரத்திலேயே 7 சதவிகிதம் கமிசன் பெற்றதாக அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு இதுவரை கரையை கடக்கும் புயலாகவே இருந்துவருகிறது. போபர்சு பீரங்கி பேர ஊழலில் ராசீவ் நேரடியாக சம்தபட்டிருந்தால் அவர் ஒரு படித்த அயோக்கியர். ராசிவுக்குத் தெரியாமலே அப்படியொரு பேரம் நடந்திருந்தால் அவர் ஒரு படித்த முட்டாள். இரண்டில் எதுவாக ராசிவ் இருந்தார் என்பதுதான் தெரியவில்லை. இரண்டில் ஏதேனும் ஒன்றில் அவர் இருந்தார் என்பது மட்டும் நிச்சயம்.

வெளியுறவுக் கொள்கைகளிலும் அவரது அறியாமை பிரதிபலித்தது. இந்து பத்திரிக்கை போல இலங்கைக்கு ஆதாயநோக்கோடு ராசிவ் வக்காலத்து வாங்கியிருக்கலாம். 'என்னுடைய அனுபவம்தான் ராசிவின் வயது" என்று வெளிப்படையாகவே சொன்ன சிங்கள நரி சே.ஆர்.செயவர்த்தனேயை 'பரி" என்று நம்பி அவர்மீது சவாரி செய்ய முயன்றார் ராசிவ். 'பரி" அவரைக் குப்புறத்தள்ளியதோடு நில்லாமல் குழிதோண்டிப் புதைக்கவும் செய்தது.

இத்தருணத்தில் பழைய வரலாற்றைப் புரட்டிப்பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு சமஉரிமை தரப்படவேண்டும் என்ற 1955-லேயே கூறிய அரசியல் நிபுணர் எம்.என்.பெரேரா 'அவர்களை மதிக்க தவறினால் வடக்கு-கிழக்கு வாழ் தமிழர்கள் வேறு வழியின்றி பிரிந்து சென்று இந்தியாவுடன் ஒரு மாநிலமாய் இணைந்து விடக்கூடும்" என்றார். ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து நசுக்கிவருவது தொடர்பாக இந்தியா கேள்வி எழுப்பும் என்ற அச்சம் சிங்கள அரசுக்கு எப்போதும் இருந்து வந்தது. இந்த நிலையைத்தான் செயவர்த்னே என்ற நரி தனது சூழ்ச்சியால் மாற்றி அமைத்தது. இந்தியாவில் விவரம் தெரிந்த ஆட்சியாளர்கள் இருந்தபோது இந்த நரிகளின் திட்டம் பலிக்கவில்லை. ராசிவ் என்ற விவரம் தெரியாத தலைவர் ஒருவர் பிரதமர் பொறுப்பில் இருந்த போது தான் அவர்களுக்கு இது சாத்தியமானது.

1987 சுலையில் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எந்த தரப்பினருக்காக அந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ அந்தத் தரப்பான தமிழர்களின் - தமிழ்ப் பிரதிநிதிகள்ன் கையெழுத்து இல்லை என்பது வினோதமான உண்மை.

என்று இந்திய அமைதி காப்புப் படை இலங்கையில் இறங்கியதோ அன்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் செயலாகவே பாவிக்கப்பட்டது. ஆனால் இந்திய படைக்கு செயவாத்தனே வாசல் திறந்தது இந்தியாவுக்கும் ஈழப்போராளிகளுக்கும் இடையே இருந்த நட்புறவைக் குலைத்து அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுத்ததான் என்பதை வரலாறு உணர்த்தியது.

அவர்களுக்குள்லேயே சிறிய சிறிய முரண்பாடுகளை ஏற்படுத்தியபடியே சிங்கள அரசு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும் அவர்களை கொழும்பு கொண்டு செல்ல இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சியும் நிலைமையை மோசமாக்கின.

இந்தியா தலையிட்டு அவர்கள் 17 பேரையும் மீட்கும் என்றே அனைவரும் நம்பினர். ஈழத்தில் இருந்த இந்திய அமைதி காப்புப் படை தளபதி கூட அப்படித்தான் நம்பினார். அவர்கள் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்தார். ஆனால் ராசிவ்காந்தி அதைத் தடுக்க விரும்பவில்லை.

விமானத்தில் ஏற்றப்பட்ட போராளிகள் சயனைடு உட்கொண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். அன்று புலிகள் அமைப்பிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு அது.
'அந்த 13 உயிர்களை காப்பாற்றியிருக்க வேண்டும். அதைத்தான் ராசிவ் அரசிடம் வலியுறுத்தினேன்" என்கிறார் இலங்கைப்பிரச்சினையில் முக்கிய பங்காற்றிய உயர் அதிகாரி ஐ.என்.தீட்சித்.

'குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோரை விமானம் மூலம் கொழும்பு கொண்டு செல்ல முயன்றதன் நோக்கம் - இந்திய ராணுவத்தையும் புலிகளையும் மோதச் செய்ய வேண்டும் என்பது தான்" என்று லண்டன் டஅய்ம்சு என்ற பத்திரிக்கையில் வெளிப்படையாய் பேட்டி கொடுத்தார் இலங்கை அமைச்சர் லலித் அதுலத்முதலி.

ஆக ராசிவின் அறியாமையே இந்த அரசியல் பிழைக்கு காரணமாய் அமைந்தது. அச்சம்பவத்திற்கு இந்தியா தலைமைதான் பொறுப்பு என்பதால் இருதரப்பினரிடையேயும் வெறுப்பு மேலோங்கியது.

புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் போர் ஏற்படுத்தியது. மிகப்பெரிய ராணுவ பலத்துடன் வந்திறங்கிய இந்தியா அப்போரில் தோல்வியடைந்து தலைக்குனிவோடு திரும்ப வேண்டியிருந்தது. இது இந்தியாவுக்கு ராசிவால் ஏற்பட்ட வரலாற்றுப் கலங்கம்.

ஆக 1955-ல் பெரேரா சொன்னதுதான் யதார்த்தம். அதை நடைபெறாமல் தடுப்பதில் செயவர்த்தனே வெற்றி பெற்றார். இந்தியாவையும் தமிழர்களையும் அவரால் மோதவிடமுடிந்தது. இரண்டு தரப்பும் ரத்தம் சிந்த சிங்கள ராணுவம் பார்வையாளனாய் காலரியில் அமர்ந்து கைதட்டி ரசித்து கொண்டிருந்தது. இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான இந்தப் பகைமை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு செயவர்த்தனே சேர்த்து வைத்த அருவருப்பான சொத்து.

ராசிவ் படுகொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் போபர்சு பேரம் தொடர்பான கொலையாகவும் இருக்கலாம். போபர்சு நிறுவனம் இருக்கும் சுவீடன் நாட்டின் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டது இந்த யூகத்தை வலுப்படுத்துகிறது. இன்னொரு காரணம் மூன்றாம் உலக நாடுகளில் வளர்ந்து வரும் இனம் தலைவர்களைக் குறிவைக்கும் சி.அய்.ஏ-வின் வேலையாகக்கூட இருக்கலாம். எப்படி இருப்பினும் கொலை செய்யப்பட்டார் என்பதால் மட்டும் இராசிவ்காந்தி மகாத்மா காந்தியாகி விடமுடியாது. மகாத்மா தனது இலட்சியத்திற்காக உயிர்விட்டார்.

'தமிழ்நாட்டில் இராசிவ் ரத்தம் சிந்தியும் நம்மால் அதைப்பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முடியவில்லையே" என்ற ஏக்கம் தமிழக காங்கிரசாருக்கு இருக்கிறது. பேட்டை ரவுடிகளையும் சட்டவிரோத பேர்வழிகளையும் சயநலமிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாய் தெரியவில்லை.

பெரியார் பேரன் என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு தமிழக காங்கிரசின் பெரிய தலைவர்களாய் இருக்கும் வாய்ச் சொல் வீரர்கள் 'காசுமோபாலிடன் கிளப்" போன்றவற்றிலேயே காலமெல்லாம் 'குடி"யிருந்து விட்டு காந்தி செயந்திக்கு காங்கிரசு அலுவலகம் போய் மாலை அணிவித்து காந்தி குல்லாவுடன் பத்திரிக்கைக்கு போசு கொடுப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது 'தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பது தேச விரோதம் என்று முடிப்பார்கள்.

சத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே தங்களது வீரப்பிரதாபங்களை அரங்கேற்றி வரும் தமிழக காங்கிரசாருக்கு போர்களங்களில் வீரப்போர் புரிந்து மிகப்பெரிய ராணுவத்துடன் துணிவுடன் மோதி வென்ற தமிழ்ச் செல்வனின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வரலாறுகளில் பினைந்திருக்கும் அர்ப்பணிப்பும் தியாகமும் இவர்களால் உணர்ந்து கொள்ள இயலாது முடியாது. டெல்லியில் 'மேட்டர்" முடிக்க சென்னையில் 'மீட்டர்" போடும் வேலையைப்பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது.

இவர்களுக்கும் 7 சதவீகிதம்தான் வாங்ககிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இவர்களுக்கு காந்தியைத் தெரியாது என்பது தெரிகிறது. காந்திய வழியில் உயிரிலந்த திலீபனையும் இவர்களுக்கு தெரியாது. காமராசரின் நேர்மையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இராசிவின் ரத்தத்தைக்காட்டி எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் அவர்களிடமில்லை. எனவே அவர்களை நொந்து பயனில்லை. அவர்களால் காங்கிரசுக்குதான் ஆபத்து. இப்படிப்பட்ட தலைவர்களையும் தொண்டர்களையும் வைப்திருப்பதற்காக காங்கிரசு கலலைப்பட வேண்டும்.

அறிவுப்பூர்வமாகப் பேசுவதாகச் சொல்லும் இந்து போன்றவர்களின் ஆதரவுடன் தான் ஆர்ப்பரிப்பார்கள். 'இலங்கை ஒரே நாடு" என்ற போதிப்பார்கள். ஆனால் தங்களது சொந்த ஆட்சி உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்துவிட்டு ஒரே நாடு' என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட தமிழர்கள் மீது 'ஒரே மொழி" என்ற ஆயுதத்தை சிங்கள அரச பிரயோகித்து தான் பிரச்சினையைக் கிளப்பியது என்பதை அறிந்தும் அறியாதவர்களாய் நடிப்பார்கள். 1956-ல் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தமிழர்கான இரண்டாம் தர குடிமக்களாய் ஆக்கியது பற்றி இவர்கள் மூச்சு விடமாட்டார்கள். செல்வநாயகம் போன்ற தலைவர்களின் அகிம்சைப் போராட்டம் பயனளிக்காததையும் தமிழர்களைக் கொன்று குவித்ததையும் நினைக்க மாட்டார்கள். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை விரும்பி ஏற்கவில்லை - 'போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது" என்று அறிஞர் க.சிவத்தம்பியின் உருக்கமான விளக்கம் இவர்கள் நெஞ்சை தொடப்போவதில்லை.

இந்தியா இந்த அர்த்தமற்ற குரலை நம்பப்போகிறதா இல்லை நலன்களுக்கு எது உகந்தது என்ற அடிப்படையில் முடிவெடுக்கப்போகிறதா? இதுதான் நம் முன் உள்ள கேள்வி. இராசிவ் தான் முக்கியம் என்ற உணர்வுபூர்வமான அல்லது அரசியல் சுயநலப்போக்கான இல்லை அறிவாந்த குரலா என்பதுதான் இப்பொழுது அவசியம்.

இந்தியாவின் நலன் என்பது இந்த பிராந்தியச் சூழல் தொடாபானது. இந்தியா தனது நற்புநாடென இன்னமும் கருதும் இலங்கை சீனாவிடமிருந்தும் பாக்கித்தானிடமும் இசுரேலிடமும் ஆயுதம் வாங்கிக் குவிக்கறது. இது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல. இந்திய எதிரிகள் காலூன்றி இலங்கை தொடர்ந்து இடம் கொடுத்து வருவது மிகமிக ஆபத்தானது.

திருகோனமலையில் கடற்படைத் தளம் அமைக்க அமெரிக்க மேற்க்கொண்ட முயற்pசகளை நீண்ட நெடுங்காலமாய் இந்தியா எதிர்த்து வருகிறது. நமது நண்பன் இலங்கையோ திருகோணமலையை அமெரிக்காவுக்கு தாரைவார்க்க தயாராக இருக்கிறது. அது இந்தியாவுக்கு தலையையும் அமெரிக்காவுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருப்பது அசிங்கமான இராசாதந்திரம்.

இலங்கையே வரவேற்க தயாராக இருந்தும் திருகோணமலையில் அமெரிக்க காலுன்ற தயங்குவதற்கு காரணம் தமிழ்ப் போராளிகளின் உறுதியான நிலைப்பாடும் தியாகமும் தான் என்பதை இந்தியா உணரவேண்டும். இந்தியாவின் பாதுகாப்புகான ஆபத்தை தடுத்து நிறுத்துவது தமிழ்ப்போராளிகளின் வலுவான எதிர்ப்புத் தான். இதற்காக நாம் நன்றி சொல்லத் தேவையில்லை. அதே நேரத்தில் ராசிவ் காலத்தில் நடந்த நம்பிக்கை துரோகம் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.

ஈழம் அமைவது பலவகைகளில் இந்தியாவின் பாதுகாப்புக்க உகந்ததாய் அமையும். ஈழத்தை எதிர்ப்பதுதான் இந்தியாவுக்க ஆபத்தை விளைவிக்கும். உதாராணத்திற்கு வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் ராடாரைச் சொல்லலாம். தமிழ்ப்போராளிகளை கண்காணிப்பது என்ற பெயரில் கல்பாக்கம் அணுமின்நிலையத்தையும் விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தையும் கண்காயிக்கிறது அமெரிக்க ராடார். நட்பு நாடு என்றெல்லாம் இனியும் ஏமாறாமல் அந்த ராடாரை குண்டு வீசித் தகர்ப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி யெயும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது.
கூடிய விரைவில் தமிழ் ஈழம் மலர இருக்கும் நிலையில் நமது அருகாமை நாடான ஈழத்தை நட்புடன் நடந்த இந்தியா முன்வரவேண்டும். அறியாமையால் செய்ய தவறுகள் - அன் பின் விளைவுகள் என்ற பழையவற்றைப் பேசி வரலாற்றுக் கடமையிலிருந்து வழுக்கிவிடக் கூடாது.

'தனி ஈழம் அமைத்து கொடுங்கள்" என்ற பிரபாகரன் இந்தியாவிடமும் கேட்டதில்லை... வேறு எந்த நாட்டிடமும் போய்க் கேட்கபோவதுமில்லை... கேட்க வேண்டிய அவசியமுமில்லை. இலங்கை அரசுதான் நாடு நாடாகப்போய் ஆதரவு தேடி வருகிறது. புத்தரின் பிட்சா பாத்திரம் தான் ஆயுதங்களால் நிரம்பி வழிகிறது. புலிகள் அமைப்பு எதற்கும் அஞ்சாமல் போராடுவதற்கு ஆயுத பலத்தை விட தார்மிக பலமுண்டு. இதை உணர்ந்து தனது எதிர்மறைப் போக்கைக் கைவிட்டு வரலாற்றில் எற்பட்ட களங்கத்தை இந்தியா துடைக்க முன்வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

2.2.08

தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது சட்டம் பாயும்!

- நக்கீரன் (01-02-2008)
கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை இராணுவத்தால் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதும், இரங்கல் தெரிவிப்பதும் சனநாயக உரிமையாகும். ஆனால் தடையைக் காரணம் காட்டி இரங்கல் தெரிவிக்க கூடாது என்று சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஆவேசப்படுவது வேடிக்கையாக உள்ளது. இது சனநாயகத்திற்கும் மனிதநேயத்திற்கும் எதிரான போக்கு எனத் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வித்துறை அதிகாரங்களை பொதுப் பட்டியலில் இருந்து விலக்கி, மாநிலப் பட்டியலில் இணைக்கவேண்டும் செம்மொழியான தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இந்திய அரசு அறிவிக்கவேண்டும் தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி கொன்று வருவதை வன்மையாக கண்டிப்பதோடு இந்திய ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து அறைகூவல் விட்டு வரும் இலங்கை அரசின் போக்கை வேடிக்கை பார்ப்பது இந்திய அரசின் ஆளுமையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது, எனவே தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு முன்வரவேண்டும் என்ற தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே காங்கிரஸ் கட்சி மற்றும் அ.தி.மு.கழகம் இரண்டினதும் கண்டனத்துக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகியுள்ளன.

பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த கருத்துரிமை மீட்பு மாநாடு தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பகைவர்கள் மத்தியில் அச்சத்தையும் எரிச்சலையும் உருவாக்கியது மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்திலும் ஒலித்திருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் திரு. எம். கிருஷ்ணசாமி முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சனவரி 28 இல் எழுதியுள்ள கடிதத்தில் அன்னை இந்திரா காந்தி மகனும் எங்கள் தலைவி அன்னை சோனியா காந்தியின் கணவருமான எங்கள் தலைவர் இராசீவ் காந்தி நம் தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டதை நாடு என்றென்றும் மறவாது. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை ஆதரித்து சில அரசியல் கட்சிகளும் அரசியல் சாராத இயக்கங்களும் பேசி வருகின்றன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். எங்களின் தலைவர் இராசீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்குக் காரணமான வி.புலிகள் இயக்கத்தை எந்த உரூபத்தில் யார் ஆதரித்தாலும் காங்கிரஸ் அதை அனுமதிக்காது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருபவர்கள மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இதே கிருஷ்ணசாமி அன்னை இந்திராவைக் சுட்டுக் கொன்ற சீக்கிய மதத்தைச் சார்ந்தவரை தலைமை அமைச்சராக்கி காங்கிரஸ் அழகு பார்ப்பதை வசதியாக மறந்துவிட்டார். அவர்களுக்கு மாவீரர் பட்டம் கொடுத்து பொற்கோயிலில் வைத்து வழிபாடு செய்வதையும் மறந்துவிட்டார்.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திருமாவளவன் போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் அது போன்ற கூட்டங்கள் நடைபெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் - அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியதோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாக வெளிநடப்பும் செய்தனர்.

வெள்ளைக்காரன் காலத்தில் அந்நிய துணிகளைக் கொளுத்தியும் வரிகொடா இயக்கம் நடத்தியும் சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய கட்சி காங்கிரஸ் கட்சி. அதற்காக தேசத் துரோகக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. வா.உ. சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்தார்.

ஆயுதம் தாங்கி வெள்ளை ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய பகவத் சிங் சுகதேவ் ராஜகுரு வாஞ்சிநாதன் போன்றோர் தூக்கிலடப்பட்டனர். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அவர்கள் மாவீரர்களா காங்கிரஸ்காரர்களால் கொண்டாடப்பட்டனர். இந்தக் கட்சிதான் இன்று வி.புலிகளுக்கு வாய்மொழி ஆதரவு கொடுப்பது - இரங்கல் உரை ஆற்றுவது - சட்டத்துக்கு முரணானது என வாதிடுகிறது. இது வேடிக்கையாக மட்டும் அல்லாமல் வேதனையாகவும் இருக்கிறது.

சுதந்தரம் என்பது குடிமக்களது அடிப்படைச் சுதந்திரம். அதனைச் சாதாரண சட்டங்கள் கட்டுப்படுத்த முடியாது.

கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வி.புலிகளை ஆதரித்துப் பேசுவது, எழுதுவது, மாவீரர்கள் நாள் கொண்டாடுவது, தமிழீழ தேசியக் கொடியைப் பொது இடங்களில் ஏற்றுவது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. இங்குள்ள தமிழ்வானொலிகள், வானொளிகள் வி. புலிகளை ஆதரித்துச் செய்திகள் வெளியிடுகின்றன. காரணம் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கூட்டம் கூட்டும் சுதந்திரம் கனடிய யாப்பில் அடிப்படை சுதந்திரங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. வி. புலிகளுக்கு ஆயுதம் வாங்க நிதியுதவி செய்வது மட்டுமே குற்றமாகக் கருதப்படுகிறது. போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கப்படுவது தடை செய்யப்படவில்லை. அப்படியான அமைப்புக்களுக்கும் தடை இல்லை.

இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆவேசப்படும் காங்கிரஸ்காரர்கள் இந்திய அமைதிப்படை கொன்று குவித்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். கற்பழிக்கப்பட்ட தமிழச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்த 300,000 மக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். குண்டு போட்டு தகர்க்கப்பட்ட 50,000 வீடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வி. புலிகள் தலைவரைச் சுட்டுக் கொல்லுமாறு இந்திய இராணுவ தளபதிக்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்ஷித் மூலம் ஆணை பிறப்பித்த இராசீவ் காந்தியை நினைத்துப் பார்க்க வேணடும். அனைத்துலகக் கடலில் பயணம் செய்த வி.புலிகளின் கப்பலை மடக்கிப் பிடித்து அதில் பயணம் செய்த கேணல் கிட்டு உட்பட பத்து வி.புலிகளின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த இந்திய கடற்படையை நினைத்துப் பார்க்க வேண்டும். இராசீவ் காந்தியின் உயிர்தான் வெல்லம் மற்றவர்களது உயிர் கிள்ளுக் கீரை என வாதிடுவது அல்லது நினைப்பது தவறானதாகும். அழுவதாக இருந்தால் எல்லோருக்கும் சேர்த்து அழுவோம்.

இந்தியா உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு எனக் கூறப்படுகிறது. அப்படியானால் மக்களாட்சியின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக அது நடந்து கொள்ளவேண்டும். “கருத்துரிமை மீட்பு” மாநாடுகள் நடத்த வேண்டிய அவலத்துக்கு இடம் வைக்கக் கூடாது. கனடா போன்ற நாடுகளைப் பார்த்தாவது மக்களாட்சி மாண்புகளைப் படித்துக் கொள்ள வேண்டும்.

வி.புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமா இல்லையா என்பதை ஆராய வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் அதற்கான தடைச் சட்டம் கொண்டுவரப் படும் என்றும் சட்ட மன்றத்தில் தெரிவித்த முதல்வர் கருணாநிதி இப்போது அப்படியான குழுவுக்கு அவசியம் இல்லை என்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோர், ஊர்வலங்கள் நடத்துவோர், உண்ணா நோன்புகள் மேற்கொள்வோர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (Unlawful Prevention Act No. 37 of 1967) கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

சட்டசபையில் இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சபை விதி 110 இன் கீழ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் முதலமைச்சர் தலைமையில் நிதியமைச்சர் அன்பழகன், நான், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், டிஜிபி, எடிஜிபி, (புலனாய்வுத்துறை) ஆகியோரோடு விவாதித்தோம். இதற்காக புதிதாக சட்டம் கொண்டு வர வண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க இயலுமா என்றெல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டது. முடிவில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்டப்படி குற்றமுடையதாகும்.

அத்தகைய குற்றமிழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்பு அடிப்படையில் இயங்குவோராயினும் அவர்கள் அரசின் இந்த மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மேல் குறிப்பிட்ட சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப் படுவார்கள்.”

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் தி.மு.க. வின் பலம் 95 ஆகும். எனவே பெரும்பான்மைக்கு வேண்டிய மேலதிக 22 உறுப்பினர்களுக்கு 35 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியைப் பெரிதும் நம்பியுள்ளது.

சட்டமன்றத்தில் திருமாவளவனைக் கைது செய்யக் கோரி காங்கிரஸ் வெளிநடப்புச் செய்ததைக் கண்டு மிரண்டு போன முதல்வர் கருணாநிதி பழைய சட்டம் ஒன்றை தூசி தட்டி தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போருக்கு எதிராகக் கையில் எடுத்துள்ளார். கொள்கை வேட்டி போன்றது பதவி தோளில் போடும் துண்டு போன்றது என்று அண்ணாவை மேற்கோள் காட்டி முதல்வர் கருணாநிதி மேடைகளில் அலங்காரமாகப் பேசினாலும் அவர் தனது ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்தத் தடைச் சட்டம் அதையே உணர்த்தி நிற்கிறது.

விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதலல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது மக்களாட்சியின் மாண்புகள் பற்றிப் பேசுவதும் பேச்சுச் சுதந்திரம் பற்றிப் புகழ்ந்து பேசுவதும் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் அவற்றை நசுக்கு அடக்குமுறைச் சட்டங்களைக் கையில் எடுப்பதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. பொடா சட்டத்தைப் பயன்படுத்தி வைகோ, நெடுமாறன், சுப வீரபாண்டியன் போன்றோரைச் சிறையில் அடைத்த அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அது போன்ற ஒரு சட்டத்தை இப்போது கையில் எடுக்கும் இன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் வித்தியாசம் இல்லை.

மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை எதுவோ அதுவே திமுக அரசின் கொள்கை என முதல்வர் அண்மையில் திருவாய்மலர்ந்திருந்தது நினைவு இருக்கலாம்.

விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் நானும் ஒரே அணியில் இருக்கிறோம் என்று எந்த வெட்கமோ துக்கமோ இன்றி தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியது நினைவு கூரத்தக்கது.

அரசியலில் கருணாநிதியும் ; ஜெயலலிலதாவும் கீரியும் பாம்பும் போல் இருந்தாலும் புலி எதிர்ப்பில் இருவரும் சாடியும் மூடியும் போல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் திருமாவளவன் மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் “புலிகள் மீதான தடையை நீக்கி, வி. புலிகள் அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்று நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்துரிமை, சனநாயக உரிமை. அதில் எந்தத் தவறும் இல்லை. இதுதான் எங்கள் அமைப்பின் நிலை. அதற்காக எங்களை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்கள் கருதினால் அதற்கும் நாங்கள் தயார்” எனக் கூறியுள்ளார்.

யூனியர் விகடன் கிழமை இதழுக்கு தொல். திருமாவளவன் அளித்த செவ்வியில் 'இந்தியாவில் இருந்து கொண்டு இன்னொரு தேசப் பிரச்னையில் இவ்வளவு தூரம் சலசலப்பு உண்டாக்குவது நியாயமா?' என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

'நான் பிறந்த மண்ணின் மீது பற்றுடையவன்தான். அதேசமயம் என் தாய் நாடு தவறு செய்தால் அதை உரிமையோடு தட்டிக்கேட்கும் பொறுப்பு ஒரு குடிமகனான எனக்கு உண்டு. கடலுக்கடியில் கண்ணிவெடிகளைப் போடுவது, இலங்கை அரசின் அடாவடி செயல்..! கடந்த பத்து வருடத்தில் 200 மீன்வர்களைக் கொன்றிருக்கும் இலங்கை அரசை நம் மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். ஆனால், எங்களைப் போன்றவர்கள் மீது செய்யாத குற்றத்தைச் செய்ததாகச் சொல்லியும் இலங்கைக்கு ஆயுதங்களைக் கடத்துவதாகச் சொல்லியும் பொய்க்குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன்... என்னைப் பொறுத்த வரை புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் அதற்காகப் பெருமைப்படுவேன்!' (யூனியர் விகடன் - சனவரி 03, 2008)

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள் ஒன்று திரண்டால் மட்டுமே தமிழக அரசின் அடக்குமுறையை எதிர்கொள்ள முடியும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ நெடுமாறன் போன்றோர் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் கைவிட்டு ஒரு அணியில் ஒரு குடையின் கீழ் ஒன்று திரளவேண்டும்.

தமிழக அரசியலில் இரண்டு அணிதான் உண்டு. ஒன்று விடுதலைப் புலிகள் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போர் அணி. மற்றது அதனை எதிர்ப்போர் அணி.